ஒருவரே பல வேடங்களை ஏற்று நடிப்பது திரைப்படங்களில் சுலபம்; வாழ்க்கையில் மிகக் கடினம் . சாருஹாசன் அந்த வகையில் தனித்துவமான ஒரு மனிதர். திறமையான ஒரு வழக்கறிஞராக இருந்தவர், முப்பது ஆண்டுகள் அந்தத் தொழிலில் பல வெற்றிகளை ருசித்தவர். ஓய்வுபெறும் வயதில் நடிக்க வந்து, இந்தியாவில் நடிப்புக்கு உச்சபட்ச அங்கீகாரமாகக் கருதப்படும் தேசிய விருதை வென்றவர். 80 வயதில் எழுதவந்தவர்.
சட்ட நுணுக்கம், சினிமா, கடந்த 80 ஆண்டு கால தமிழக வரலாறு என எல்லாவற்றையும் தனது பார்வையில் அவர் விவரித்து எழுதிய பதிவுகளின் தொகுப்பே இந்த நூல். 'குங்குமம்' இதழில் தொடராக வெளிவந்த ; அழியாத கோலங்கள்', சாருஹாசன் எழுதிய முதல் தமிழ் நூலாக இப்போது வெளிவருகிறது. இளைஞர்கள் பலர் கூட பழமை தட்டிப்போன சிந்தனையோடு திரியும் சூழலில், 80 வயதில் சாருஹாசன் தன் எழுத்தால் சமயங்களில் அதிரவைக்கிறார். அவரது எழுத்தில் இயல்பாக இழைந்திருக்கும் நகைச்சுவை, எவ்வளவு கடினமான உண்மையையும் சுலபமாக ஜீரணிக்கச் செய்துவிடுகிறது.
தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், தன் இளைய சகோதரர் கமல்ஹாசன் வாழ்வில் நடந்த சம்பவங்கள் எனப் பலவற்ரையும் தயக்கமின்றி உள்ளது உள்ளபடி எழுதியிருக்கிறார் அவர். இந்த நேர்மைக்காக அவருக்குத் தலைவணங்க வேண்டும்!
No product review yet. Be the first to review this product.