தமிழ் சினிமாவில் 500 கோடி வசூல் சாத்தியமா!

தமிழ் சினிமாவில் 500 கோடி வசூல் சாத்தியமா!

  • யுவகிருஷ்ணா

பெரிய படங்கள் வெளியாகும் போதெல்லாம் அந்தப் படத்தின் நாயகனின் ரசிகர்களோ, இயக்குநர்களின் ரசிகர்களோ பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை இணையத் தளங்களில் வைரல் ஆக்குவது வழக்கமாகிக் கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்த வசூலாக ஒரு சராசரி தமிழன் நினைத்தே பார்க்க முடியாத ஒரு குத்துமதிப்பான பெரும் தொகையை குறிப்பிடுகிறார்கள்.

உண்மையில் ஒரு படம் மூலமாக தயாரிப்பாளருக்கோ, தயாரிப்பு நிறுவனத்துக்கோ கிடைத்த லாபம் எவ்வளவு என்பது சம்மந்தப்பட்ட ஆடிட்டருக்கும், வருமான வரித்துறைக்கும் மட்டுமே துல்லியமாக தெரியும்.

சரி, நிஜமாகவே இவர்கள் குறிப்பிடுகிற ஐநூறு கோடி, ஆயிரம் கோடியெல்லாம் சாத்தியமா?

தமிழ்நாட்டில் ஏறக்குறைய 1600 திரைகள் இருக்கின்றன. இவற்றில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் அளவுக்கு 250க்கும் குறைவான இருக்கைகள் கொண்ட திரைகளே உண்டு. மீதியிருப்பவை பெரும்பாலும் 500 முதல் 700 வரை இருக்கைகள் கொண்ட திரைகள். 1000 இருக்கைகள் கொண்ட திரைகளை இன்று விரல்விட்டு எண்ணிவிடலாம். முன்பெல்லாம் தியேட்டர்களில் பால்கனி இருந்தது. இன்று அது அரிது. பால்கனியை தனியாக 150 இருக்கைகள் கொண்ட திரையாக பெரும்பாலான திரையரங்குகள் மாற்றிவிட்டன. அதிகபட்சமாக தமிழ்நாட்டில் ஒரு காட்சிக்கு 8 லட்சம் பேர் படம் பார்க்க முடியும். டிக்கெட் விலை சராசரியாக 150 என்று வைத்துக் கொண்டால், முழுமையாக நூறு சதவிகிதம் இருக்கைகள் நிரம்பினாலும் (அது சாத்தியமல்ல என்றாலும்) தமிழ்நாட்டால் ஒரு நாளைக்கு சினிமாவில் 50 கோடி வரைதான் வணிகம் செய்ய முடியும். விழா நாட்களிலும், பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவரும்போதும் மேலும் சில காட்சிகளுக்கு அனுமதி கிடைத்தாலும் கூட, கூடுதலாக 10, 20 கோடிகள் ஓரிரு நாட்களுக்கு வசூலிக்கலாம்.

ஆக - ஒட்டுமொத்தமாகவே ஒரு வாரத்துக்கு மொத்த தமிழ்நாடும் தியேட்டரில் அமர்ந்து படம் பார்த்தால் 400 கோடி ரூபாய் வரை வணிகமாகும். இது மொத்தத் தொகை. இதில் ஜி.எஸ்.டி 28% மற்றும் பொழுதுபோக்கு வரி 8% (வேற்று மொழி படங்களுக்கு இன்னும் அதிகம்) சேர்த்து குத்துமதிப்பாக 150 கோடி வரை போய்விடும். எனவே, அதிகபட்சமாக தமிழ்நாட்டில் ஒரு வாரத்துக்கு 250 கோடிவரை நிகர வருமானமாக டிக்கெட் கலெக்சன் பார்க்க முடியும் என்பதுதான் யதார்த்தம்.

இதுவும் கூட தமிழ்நாட்டின் அனைத்து அரங்குகளிலும், ஹவுஸ்ஃபுல்லாக ஒருவாரம் ஓட்ட முடிந்தால் கிடைக்கக்கூடிய தொகை. இதில் தியேட்டர்காரர்கள் மற்றும் வினியோகஸ்தர்களின் பங்கு போக (ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு முறை ஒப்பந்தம்) தயாரிப்பு தரப்புக்கு இதில் 50% - அதாவது 125 கோடி ரூபாய் தேறினாலே பெரிய விஷயம். உழவன் கணக்கு போட்டால் ஒழக்குதான் மிச்சம் என்பதை போல.

எந்தவொரு தனிப்படமுமே 1600 திரைகளிலும் திரையிடப்பட வாய்ப்பில்லை. பெரிய நடிகர்களின் படங்களே கூட 1000, 1200 திரைகளில் திரையிடப்பட்டால் அதிகம்.

இப்போது குத்துமதிப்பாக ஒரு வாரத்துக்கு ஒரு பெரிய படம் அதிகபட்சம் எவ்வளவு இங்கே வசூலிக்க முடியுமென்று நீங்கள் கணித்துக் கொள்ளலாம்.

ஒரு தமிழ்ப்படத்தின் ஒட்டுமொத்த லாபத்துக்கு 60% வரை தமிழ்நாட்டின் திரையரங்குகளையே நம்பியிருக்க வேண்டும். இந்த திரையரங்க லாபத்தைத் தவிர்த்து ஆடியோ ரைட்ஸ், இதர மாநிலங்களில் வெளியீடு, ஓடிடி உரிமை, சேட்டிலைட் உரிமை, வெளிநாடுகளில் வெளியீடு, இணையத் தளங்கள் மூலம் வருவாய் உள்ளிட்ட பல்வேறு வகையிலான லாபங்களும் உண்டு. எனினும் அவை, நாம் ஏற்கனவே குறிப்பிட்டதை போல ஒட்டுமொத்த லாபத்தில் அதிகபட்சமாக 40% வரையே கிடைக்கக்கூடும். அங்கும் வரிகள், பங்கு போன்றவை உண்டு.

இந்த ஃபார்முலாவுக்கு தப்பியும் சில படங்கள் விதிவிலக்காக வெவ்வேறு வகையில் லாபம் சம்பாதிக்கும் சாத்தியம் உண்டு. உதாரணத்துக்கு ‘மஹாராஜா’ திரைப்படம், திரையரங்குகளில் சம்பாதித்ததைவிட, ஓடிடியில் அதிகம் சம்பாதித்திருக்கிறது என்கிறார்கள். ரஜினிகாந்தின் 2.0 திரைப்படம், தமிழ்நாட்டில் பெரிதாக லாபம் பார்க்காத நிலையில் வெளிமாநிலங்களில் அமோக அறுவடை நிகழ்த்தியது என்கிறார்கள். இவையெல்லாம் விதிவிலக்குகள்தானே தவிர எப்போதும் நடக்கக்கூடிய அதிசயமல்ல.

சரி, வருமானத்தை பார்த்துவிட்டோம். செலவு? ஒரு நாளைக்கு ஷூட்டிங் சென்றாலே, தயாரிப்பாளர் குறைந்தபட்சம் 5 லட்சம் கையில் வைத்திருக்க வேண்டும். பெரிய படங்களுக்கு இது ஒரு நாளைக்கு 25 லட்சம் வரை ஆகும். அதாவது ‘வாழை’ படத்துக்கு ஒரு மாதத்துக்கான படப்பிடிப்பு செலவு ஒன்றரை கோடி ஆயிருக்கும் என்றால், ‘கோட்’ படத்துக்கு அது ஏழரை கோடியாக ஆகியிருக்கும். இது புரொடக்சன் யூனிட் செலவு மட்டுமே. ஒரு படத்தின் படப்பிடிப்பு நீண்டுக்கொண்டே போனால் செலவும் அதிகரித்துக் கொண்டே போகும்.

படப்பிடிப்புக்கான கருவிகள் வாடகை செலவு தனி. ஒரு நாளைக்கு 50,000 ரூபாய் குறைந்தபட்சம் தேவைப்படும். பெரிய படங்களுக்கு ஒரு ஷெட்யூலுக்கு (சராசரியாக 20 நாள்) 10 கோடி வரை இதற்கு மட்டுமே செலவாகிறது.

டப்பிங் ஸ்டுடியோ வாடகை ஒரு நாளைக்கு குறைந்தது 10,000. இரண்டரை லட்சம் வரை வாடகை வாங்கக்கூடிய காஸ்ட்லி ஸ்டுடியோக்களும் உண்டு. எத்தனை நாட்கள் வாடகைக்கு எடுக்க வேண்டும் என்பது படக்குழுவினரின் சாமர்த்தியம்.

எடிட்டிங்கைப் பொறுத்தவரை நிமிடத்துக்கு தோராயமாக 15,000 செலவாகும். இரண்டரை மணி நேர படத்துக்கு 20, 25 லட்சங்கள் செலவாகலாம்.

நடிகர்கள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், எடிட்டர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான சம்பளம் தனி. அவரவர் மார்க்கெட்டுக்கு ஏற்ப மாறுபடும். மார்க்கெட்டிங் மற்றும் பப்ளிசிட்டி செலவுகளை தயாரிப்பாளரின் வசதி, வாய்ப்புக்கேற்ப செலவழிப்பார்கள். ஒட்டுமொத்த படத்தின் பட்ஜெட்டில் இதற்கு 25% ஆவது இன்று செலவழிக்கிறார்கள். முன்பு படத்துக்கு ப்ரிண்ட் போடுவார்கள். இப்போது டிஜிட்டல் என்பதால் வாரத்துக்கு எத்தனை காட்சியென்று கணக்கிட்டு ஒவ்வொரு காட்சிக்கும் சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கு பணம் கட்ட வேண்டும். இதை விர்ச்சுவல் ப்ரிண்ட் பீஸ் என்பார்கள். எவ்வளவு அதிகமான திரைகளோ, அவ்வளவு அதிகமான கட்டணம்.

இதெல்லாம் அடிப்படையான செலவு. இதைத் தவிர்த்து பல்வேறு கூடுதல் செலவுகளும் உண்டு.

தமிழ்நாட்டில் ஓராண்டுக்கு 150 படங்கள் வெளியாகின்றன என்று எடுத்துக் கொள்வோம். இதில் 10 முதல் 15 படங்கள் போட்ட காசை எடுத்தாலே இன்றைய நிலையில் பெரிய விஷயம். அதில் நான்கைந்து படங்கள் மட்டுமே கணிசமாக லாபம் பார்க்கும்.

இவ்வளவு சிரமத்துக்கு இடையிலும் சினிமாத்துறை எப்படி ஜொலிஜொலிப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது? தோராயமாக வருடத்துக்கு 3000 கோடி இங்கே முதலீடு செய்யப்படுகிறது. இதன் மூலமாக பல்லாயிரக் கணக்கானோர் வாழ்க்கையை நடத்த முடிகிறது. ஒரு படம் பூஜையில் தொடங்கி, ரிலீஸ் ஆகும் வரை அதில் ஈடுப்பட்டிருக்கும் ஒவ்வொருவரும் ராஜாதான். ராஜவாழ்க்கை வாழ்வார்கள்.

பிறகு?

விதி எப்படியோ அப்படி.

பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு படம் தயாரித்துக் கொண்டிருந்த பல தயாரிப்பாளர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் இன்று ஏன் சீனிலேயே இல்லை என்று யோசித்தால், சினிமாத்துறை எந்த நிலையிலிருக்கிறது என்று புரியும்.

சினிமா என்பது இன்று குதிரை ரேஸ் மாதிரி ஆகிவிட்டது. அடித்தால் ஜாக்பாட். ஆனால், யாரோ ஒருவருக்குதான் அது அடிக்கும், சிலர் மிதமான லாபம் பார்க்கலாம். பலரும் படுகுழியில்தான் வீழவேண்டும். ஒட்டுண்ணிகள் எல்லாத் துறையிலும் வாழ்வதை போல, இங்கும் ஏகபோகமாக வாழ்கிறார்கள்.

அடுத்த முறை யாரேனும் 500 கோடி வசூல், 1000 கோடி வசூல் என்று ஜம்பம் அடித்தால், மேற்சொன்ன விஷயங்களை நினைவுப்படுத்திக் கொண்டு, ஒரு ஸ்மைலி போட்டுவிட்டு அமைதியாக கடந்துச் செல்லுங்கள்.

கட்டுரையை எழுதியவர்: யுவகிருஷ்ணா. பத்திரிகையாளர்.

Related posts