இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ''ட்ராமா படத்தை வெளியிடும் இளமாறனுக்கு என் மனமார்ந்த வா்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பெரிய ஆர்டிஸ்ட் யாரும் இல்லாமல் புது முகங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தின் கதையை நம்பி வெளியிடும் இளமாறனுக்கு என் நன்றி.
இந்த குழுவில் உள்ள யாரையும் எனக்குத் தெரியாது. இந்த குழுவை எனது மாணவன் பாடலாசிரியர் அருண் பாரதி தான் அறிமுகப்படுத்தி வைத்தார். எதிர்காலத்தில் பிரகாசமாக ஜொலிக்கவிருக்கும் குழுவினரை அறிமுகப்படுத்தியதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தின் டிரைலரையும் , பாடல்களையும் பார்க்கும் போது இந்த குழுவினர் நிச்சயம் பிரகாசமாக வருவார்கள் என்ற நம்பிக்கை என் மனதுள் ஏற்பட்டது.
இங்கு வருகை தந்த உடன் சாந்தினியிடம் 'பெயின் நெவர் எண்ட்ஸ்' என்ற வாசகம் இருக்கிறதே, அதற்கு என்ன பொருள் என்று கேட்டேன். எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு என்று ஒன்று உண்டு அல்லவா, அதனால் அது தொடர்பாக கேட்டேன்.
இந்தப் படத்தில் நிறைய புதுமுக நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியிருக்கிறார்கள் என தெரிகிறது. அவர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
இயக்குநர் தம்பிதுரைக்கு மேலும் பட வாய்ப்புகள் கிடைப்பதற்கு இந்தப் படத்தின் வெற்றி உத்திரவாதமாக இருக்கும் என நான் நம்புகிறேன்.
ட்ராமா என்றால் என்ன அர்த்தம் எனக் கேட்டேன். இது தொடர்பாக என் உதவியாளரிடம் தமிழில் என்ன என்று கேட்டபோது, அவர் 'பாதிப்பு' என சொன்னார். சினிமாவில் பாதிப்பு இல்லாமல் எதுவும் இல்லை. என்னுடைய உதவியாளர்களிடம் கதை விவாதத்தின் போது கதையை யோசிக்காதே, உன் மனதுக்கு எதை பாதிப்பை ஏற்படுத்தியதோ, அதை மனதிற்குள் அலசினால் நல்ல கதை கிடைக்கும் என சொல்வேன்.
எந்த நாட்டிலும் எந்த மக்களிடத்திலும் வரவேற்பை பெறும் ஒரே ஸ்டோரி லவ் ஸ்டோரி தான். இன்றைய இளைஞர்கள் கூட காதலிக்கிறார்களோ இல்லையோ காதலைப் பற்றி ஒரு கவிதையை எழுதி விடுவார்கள். அதனால் முதலில் அறிமுகமாகுபவர்கள் காதல் கதையை இயக்க வேண்டும் என்றால் உடனடியாக எழுதி இயக்கி விடுவார்கள். ஆனால் தம்பித்துரை அப்படி அல்ல. இந்த திரைப்படத்தில் மூன்று கதை களங்கள், கதைகள். மற்றவர்களைப் போல் வழக்கமாக இல்லாமல் வித்தியாசமான சப்ஜெக்ட்டை தேர்வு செய்திருக்கிறார் தம்பிதுரை. இதற்காகவே அவரை பாராட்டலாம்.
இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். படம் நிச்சயம் வெற்றி பெறும்,'' என்றார்.