எரியும் பனிக்காடு..
2737 BC சீனாவில் எம்பெரர் சென் நுங்வலால் (SHEN NUNG) கண்டறியபட்ட தேநீர், மலையுச்சி பாறையில் தேன் கூடு போல் தொங்கிக்கொண்டிருக்கும் தென் இந்தியாவிலுள்ள தமிழகத்தில் பல மனிதர்களை கொத்தடிமைக்கு உள்ளாக்கி, லட்சக்கணக்கான உயிர்களை தேயிலை தோட்டத்திற்கு காணிக்கையாக கொடுத்தது என்றால் நம்மால் நம்பக் கூடுமா? ஆம், நாம் அன்றாட வாழ்வில் நாம் ருசித்து குடிக்கும் ஒரு ஒருச் சொட்டு தேநீருக்கு பின்னால் வரலாற்றில் கொத்தடிமையாக்கபட்ட மக்களின் ரத்தமும், வலியும் மறைந்திருக்கிறது..
1920_களில் ஆனைமலையில், தேயிலைத் தோட்டத்தில் ஆங்கிலேயர்களால் கொத்தடிமையாகப்பட்ட மக்களின் துயரத்தை வெளிப்படுத்தும் நாவல் தான் எரியும் பனிக்காடு. 1940_ஆம் ஆண்டு வால்பாறை மற்றும் கரமலை தேயிலை எஸ்டேட்_யில் தலைமை மருத்துவராக பணிபுரிந்த பி. எச். டேனியல் இதனை இயற்றியுள்ளார்,தமிழில் இரா. முருகவேலால் மொழி பெயர்க்கபட்டது.
வாழ்க்கையில் மரணத்தை விட கொடியது வறுமை என்பார்கள். திருநெல்வேலியில் வறச்சியின் காரணமாக வறுமைக்கு உள்ளாகிய கருப்பனின் குடும்பத்தை நிலைநாட்ட கருப்பன் போராடுவது முதல் சில நிமிடங்களிலே மனதை உலுக்கியேடுக்கும். ஆசை யாரை தான் விட்டது. பணம் என்றால் பிணமும் கூட வாய் திறக்கும் என்பார்கள். வறுமை சகலத்தையும் திறந்துவிட்டது கருப்பனுக்கு .அவன் மனைவி வள்ளியும் முன் பணம் 40 ரூபாய்யை தேயிலை தோட்டத்தின் மேஸ்திரியிடம் வாங்கி வீட்டின் வறுமையை போக்கி விட்டு பணம் சம்பாரிக்கும் பல கனவுகளுடன் ஆனைமலை தேயிலை தோட்டத்திற்க்கு சென்றடைய தீர்மானித்துவிட்டனர்.
பயணத்தில் கிடைக்கும் சுவையே தனி ருசி தான். ஆனைமலை யாத்திரையில் தேயிலை எஸ்டேட்டிற்க்கு செல்லும் கூலி ஆட்கள் ஆறுகளையும் மலைகளையும் நகரங்களையும் கடந்து செல்லும் காட்சிகள் 3D விஷுவல் போல் கண்முன் ஓடின. தேயிலை தோட்டத்தில் வரிசையாக வீடுகள்... புறா கூண்டு போல் ஒரு குடிசையில் நான்கு குடும்பங்கள் தங்கும் சூழல்களும், மலை பனிக் குளிர்களும் அங்குள்ள ஆங்கிலேயர்களின் கொடுமையான விதி முறைகளும் படிக்கும் போது கருப்பன்,வள்ளியின் மேலும் கருணையை உண்டாக்கியது, ஆங்கிலேயரின் செயல்கள் மீதும் கடுஙங்கோபத்தை ஏற்படுத்தியது.
பெண்களை கைக்குட்டை போல் பயன்படுத்தும் சில காட்சிகள் இரக்கமற்ற மிருகம் மனிதன் என்று வாசகர்களே ஒப்புக்கொள்ளும் படி காட்சிகள் பதிந்திருக்கும். அதில் வள்ளியின் கதாபாத்திரம் அதற்கு இடம் கொடுக்காமல் போராடி தவிக்கும் உணர்வுகளை அழகாக கடத்தப்பட்டிருந்தது.
ஆங்கிலேயர் கொடுமைகளும் அதற்கு வழி முறையும் தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் இந்திய முதலாளிகளின் சூழ்ச்சியிலும், இயற்கை சீற்றங்களிலும், அட்டைப் பூச்சிகளின் கடிகளிலும், நோயால் போராடியும் கருப்பனும் வள்ளியும் பல கொடுமைகளை கடந்து தனது கிராமத்திற்கு செல்வார்களா? என்ற எண்ணம் ஒவ்வொறு காகித பக்கங்கள் புரட்டும் போதும் மனம் தவித்துக் கொண்டே இருக்கும்.
மழையில் ஓய்ந்த பிறகு மண்ணில் விழும் ஈசல் கூட்டம் போல் தேயிலை தோட்டத்து கூலிகள் நோயால் மடிந்து விழுவது உண்மை சம்பவத்திற்கு நெருக்கமாக அழைத்துச் சென்றது.
மனதை உலுக்கிய தேயிலை தோட்டத்தின் உண்மை நிகழ்வுகள்; • செப்டம்பர் மற்றும் அக்டோபரில் மழை தொடர்ச்சியாக பெய்துகொண்டு இருக்கும், தருணங்களில் கோணிகளை மாட்டிக்கொண்டு பெண்கள் மழையிலும்,குளிரிலும் நனைந்த படியே இலைகளைப் பிடுங்க வேண்டும்.
• மழைக்காலத்தில் உருவான அட்டைப் பூச்சிகள் கால்களிலும், உடல்களிலும் ஊர்ந்து கடித்து கொண்டே இருக்க கூடும்.
• தொடர்மழையால் ஈரம் கோர்த்த மண்தரையில் தான் மக்கள் அனைவரும் உறங்குவார்கள்.
• டெங்கு போன்ற நோய்களால் பாதிப்பு அடைந்து இருந்தாலும்,மருந்தை உண்டு விட்டு வேலைக்குச் செல்ல வேண்டும்.வேலைக்கு செல்லாவிட்டால் அவர்களுக்கு வாரத்திற்க்கான அரிசி, பருப்புகள் வழங்கப்பட மாட்டாது.
• கடனை கழித்த பிறகே தான் தனது கிராமத்திற்கு செல்ல அனுமதிக்க படுவார்கள்.
• ஒரு தேயிலை செடிக்கு, நோயால் இறந்த மூன்று மனிதர்கள் உடல் உரமாக இருக்கும் என்று அந்த நிகழ்வை வாசிக்கும் போது கண்ணில் ஆறு போல் நீர் பொத்துக் கொண்டு ஓடியது.
கனவிற்கு எல்லை மரணம் என்றால் யாரால் தான் ஏற்றுக்கொள்ள முடியும். வள்ளியின் மரணம் கருப்பனை வாழ்வின் எல்லைக்கு நிறுத்தப்பட்டது. எரியும் பனிக்காடு புத்தகத்தின் வாசிப்பானது தேநீர் நினைவால் நம் வாழ்நாள் முழுவதும் உள்ளத்தை எரித்துக்கொண்டே தான் இருக்கும்.