- யானை டாக்டர்
யானை டாக்டர் என்கிற வி.கிருஷ்ணமூர்த்தி வனத்துறையில் டாக்டராக இருந்தவர். காட்டு மிருகங்களுக்கும், பழக்கப்பட்ட மிருகங்களுக்கும் மருத்துவ உதவி செய்ததில் இவரின் பங்கு பெரியது, இவர் யானைகளுக்குரிய சிறப்பு மருத்துவம் பார்ப்பதில் வல்லவர், காட்டுமிருகங்களின் உடல் நிலையை பேணுவதற்காக இவர் உருவாக்கிய விதிமுறைகளை, இந்திய வனவியல் துறையில் கையேடாக உள்ளது.
உலகமெங்கும் உள்ள யானை விரும்பிகளுக்கும், யானை ஆராய்ச்சியாளர்களுக்கும் இவர் டாக்டர் கெ, என்று அழைக்கப்படுகிறார். நூற்றுக்கணக்கான நூல்களில் இவரைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். உலகப் புகழ்பெற்ற ஆவண நிபுணாரான ஹாரிமார்ஷல் இவரைப் பற்றி டாக்டர் கெ என்ற பெயரில் பி.பி.ஸி.க்காக ஆவணப்படம் ஒன்று எடுத்திருக்கிறார்.
காட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்கும் யானைகளைக் காட்டின் அரசன் என்பார்கள். மனிதர்களின் குணங்களை கொண்டதுமான யானைகள் நமது பண்பாடு, கலைகளின் பிரிக்கமுடியாத முக்கியக் கூறாக விளங்குகின்றது. மனிதர்கள் காட்டு உயிரினங்களுக்கு பல்வேறு இன்னல்களை இழைக்கின்றோம், எழுத்தாளர் நம்மை இந்த கதையை வாசிப்பதனால், யானை டாக்டர் சென்ற இடங்களுக்கு நம்மை கூட்டிச் செல்கிறார்.
கதை அவரோடுப் பயணித்த ஒரு வனத்துறை அதிகாரியின் பார்வையில் ஆரம்பமாகிறது. யானை டாக்டரை முதலில் சந்தித்ததில் இருந்து அவரை எப்படி இவருக்கு பிடித்துப்போனது, அங்கு வாழும் வனவிலங்குகள் இவரை எப்படி பார்க்கிறது, நேசிக்கின்றது, என்று நம்மை வியக்க வைக்கும் பல விசயங்கள் கதையில் உள்ளது.
உயிர்போகிற வலி இருந்தாலும், யானை அலறாது, துடிக்காது. கண் மட்டும் சுருங்கி இருக்கும். உடம்பில் சில இடங்களில் அங்கங்கே அதிரும். யானை சம்மதித்தால் மயக்கமருந்தே கொடுக்காமல் அறுவை சிகிச்சையே செய்யாலாம் என்பார்.
மனிதனின் கெட்ட குணங்களை நாம் பார்க்கவேண்டும் என்றால் நீங்கள் காட்டிற்கோ, மலைகளுக்கோ வரவேண்டும். பயணம் வருபவர்கள் படித்தவர்கள், பதவிகளில் இருப்பவர்கள். ஊரில் இருந்தே மாமிச உணவுகளோடு மதுபாட்டிலோடு வருவார்கள். வாந்தி எடுப்பார்கள். மலைச்சரிவுகளில் வேகமாக செல்வார்கள், வனவிலங்குகளிடம் ஹாரனை அடிப்பார்கள். உச்சமாக சத்தம் எழுப்பி இசையை ஸ்பீக்கரில் போட்டு குதித்து நடனமாடுவார்கள். மலை உச்சிக்கே சென்று கெட்ட வார்த்தையில் கூவுவார்கள். சாலை ஓரத்துக் குரங்குகளுக்கு பழங்களை அரிந்து உள்ளே மிளகாய்தூளை நிரப்பி கொடுப்பார்கள். மான்களை நோக்கி கற்களை விட்டெறிவார்கள்.
யானைகள் சாலையின் குறுக்கே இருந்தால் காரின் ஹாரனை உரக்க அடித்து அதை அச்சுறுத்துவார்கள். மதுபாட்டில்களை அத்தனை வெறியுடன் காட்டுக்குள் வீசுவார்கள். உடைந்த கண்ணாடிகள் யானைகளின் கால்களில் குத்தி சீழ்வைக்கும். அதன் பின்னால் யானையால் நடக்க முடியாது. புழுக்கள் முக்கியமான குறுதிப்பாதைகளில் உள்ள எலும்பை அது தொட்டுவிட்டால் யானை உயிர் பிழைக்காது. வீங்கிய பெறுத்த சீழ்வழியும் கால்களோடு சில நாட்கள் காட்டிலேயே அலையும். ஒரு கட்டத்தில் நடமாட முடியாமல், ஏதாவது மரத்தில் சாய்ந்து நின்றுவிடும். மனிதன் செய்யும் தவறானது அதை எப்படி பாதிக்கின்றதை கண்முன்னே காட்டியுள்ளார்.
ஒருநாளில் முப்பது லிட்டர் தண்ணீரும், இருநூறு கிலோ உணவை சாப்பிட்டு, ஐம்பது கிலோ மீட்டர் நடந்து வாழும் உயிரினம். அதன் பாதத்தில் கண்ணாடி குத்திவிட்டால் நடக்கமுடியாமல் எதுவும் சாப்பிடாமலே உருக்குலைந்துவிடும். முதுகு எலும்பு மேலே தெரிந்து, கன்ன எலும்புகளும் வெளியில் தெரியும் அளவுக்கு மெலிந்துப் போய்விடும். காட்டில் வாழும் யானைகளின் சோக நிலைமையை இக்கதையில் விவரித்து எழுதியுள்ளார்.
காட்டுக்குள் சாகிற ஒவ்வொரு மிருகத்தையும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும், அவை எவ்வளவு அழுகிய நிலையில் இருந்தாலும் சோதிக்கவேண்டும். அப்போதுதான் நோயால் இறந்ததா, இல்லை மனிதர்களால் கொல்லப்பட்டதா என்று கண்டுபிடிக்கமுடியும், வேறு ஏதாவது வைரஸ் தாக்கமா மற்றவைகளுக்கு பரவாமல் தடுக்க பிரேதபரிசோதனை வேண்டும், என இதை நடைமுறைப்படுத்தியதில் அவரின் பங்கு வனத்துறையில் இன்றும் செயல்படுத்துகிறார்கள்.
கதையில் மதுபான பாட்டில் குத்தி சீழ் வைத்த யானைக்கு சிகிச்சை அளிப்பதில் இருந்து, சிறுத்தை தாக்கிய செந்நாய்களை அவர் கவனிப்பது வரை கதை முழுவதும் விலங்கினங்கள் மீது யானை டாக்டர் காட்டும் அன்பு எல்லையற்றது.
கோயில்களில் யானைகள் மனநலத்தில் அக்கறைக் கொண்டு வருடத்திற்கு ஒருமுறை யானைகளை காடுகளுக்கு கொண்டு சென்று ஒரு மாதம் விடவேண்டும், என நினைப்பது வரை அவர் யானைகளை எந்தளவுக்கு புரிந்து வைத்துள்ளார், என்பதை அறிய முடிகிறது.
தரைவாழ் உயிரினங்களில் யானை மனிதனுக்கு அடுத்தபடியாக அதிக காலம் வாழும் உயிரினம் ஆகும். யானைகள் தம் இனத்தோடு கூட்டமாக வாழும், இவை அதிக நினைவாற்றல் கொண்டவை.
கதை முடிவில் பல மைல் கடந்து ஒரு குட்டியானை இவரை ஞாபகம் வைத்து காலில் குத்திய கண்ணாடி துண்டை எடுக்க, இவரிடம் வரும் காட்சி படிப்பவரை கண்கலங்க வைக்கும்.
இப்படிப்பட்ட கதைகளை, வரலாற்றுகளைப் படித்தப் பின்பாவது மனிதன் மரங்களை வெட்டுவது, மலைக்காடுகளில் மதுபானம் அருந்தி பாட்டில்களையும், நெகிழைகளை அங்கு வீசுவது, அதன் குடியிருப்புகளை ஆக்கிரமிப்பது போன்ற செயல்களை கைவிட வேண்டும். நாம் நலமாக வாழ விரும்புவது போன்று பிற உயிரினங்களும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என நினைக்கும். நாம் அதை வாழவும் விடவேண்டும்.
உலகின் நல்வாழ்விற்கு விலங்குகளின் வாழ்வும் இன்றியமையாதது என்பதை, யானை டாக்டர் கதை வாயிலாக அறிய முடிகிறது. டாக்டர் கிருஷ்ணமூர்த்தி எனும் மகத்தான மனிதரையும் நம்மால் அறியமுடிந்தது.
இந்த புத்தகத்தை வாங்க பியூர் சினிமா அலுவலக எண்ணை தொடர்புகொள்ளுங்கள்: 9840644916